Home » » முஸ்லிகளின் ஹிஜாப் உடைக்கு சிங்கள பாடசாலை தடை

முஸ்லிகளின் ஹிஜாப் உடைக்கு சிங்கள பாடசாலை தடை

Written By Sivamoorthy Kishokumar on Friday, May 30, 2014 | 12:32 AM

கொழும்பு மாவட்டத்தில் உள்ள முக்கிய பாடசாலைகளில் ஒன்றான ராஜகிரிய ஜனாதிபதி மகளிர் வித்தியாலயத்திற்குள் முஸ்லிம் தாய்மார் பாரம்பரிய ஹிஜாப் உடையணிந்து பிரவேசிப்பதை தடைசெய்வதற்கு பாடசாலையின் அதிபர் தீர்மானித்துள்ளார்.

இந்தத் தடையை எதிர்த்து குறித்த முஸ்லிம் தாய் உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை வழக்குத் தாக்கல் செய்துள்ளார். இந்தப் பாடசாலையில் ஏழாம் தரத்தில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவி பாரம்பரிய பஞ்சாபி உடை அணிந்துவருவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்துவருகின்றது.
இந்த சூழ்நிலையிலேயே முஸ்லிம் தாய் ஒருவரும் பாடசாலைக்குள் ஹிஜாப் உடை அணிந்து வருவதற்கு அதிபர் தடை விதித்துள்ளார்.

சிங்கள மொழிமூல பாடசாலையான கொழும்பு ராஜகிரிய ஜனாதிபதி மகளிர் வித்தியாலத்தில் நடைபெற்ற பெற்றோர்கள் கூட்டமொன்றில் கலந்துகொள்வதற்காக சென்றபோது, ஹிஜாப் உடை அணிந்திருந்த காரணத்தினால் தன்னை பாடசாலைக்குள் நுழைய அனுமதிக்கவில்லை என்று மனுதாரர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான தடையை பிறப்பிப்பதற்கு பாடசாலை அதிபருக்கு அதிகாரம் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தத் தடைக்கான காரணத்தை தெரியப்படுத்த குறித்த பாடசாலை அதிபர் தவறியுள்ளதாகத் தெரிவித்த மனுதாரர் சார்பான வழக்கறிஞர் எம்.எம். சுஹயிர், கொழும்பு மாவட்டத்தில் எந்தவொரு சிங்கள மொழிமூல பாடசாலையிலும் இவ்வாறான தடை இல்லை என்றும் கூறியுள்ளார்.

இந்த மனுவை எதிர்வரும் 19 ம் திகதி விசாரணைக்கு அழைப்பதற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அன்றைய தினம் இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விளக்கமளிக்குமாறு பாடசாலை அதிபர் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.இதனிடையே, இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான பாடசாலை நிர்வாகத்தின் கருத்துக்கள் உடனடியாக கிடைக்கப்பெறவில்லை.

எனினும், பஞ்சாபி உடை தடைசெய்யப்பட்டமைக்கு எதிரான வழக்கின்போது, மாணவர்களிடையே இனவாதத்தை தூண்டும் நோக்கில் அந்த மனு முன்னெடுக்கப்படுவதாக பாடசாலை அபிவிருத்தி குழுவினைச் சேர்ந்த சித்ரானந்த கமகே குற்றம் சாட்டினார். இஸ்லாமிய இனவாத குழுக்கள் இதன் பின்னணியில் இருப்பதாகவும் அவர் சாடினார்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. WeCreatorsNet - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger