Latest Post

உருகுவேவை பிரேசில் பழிவாங்க வேண்டும்: பிலே

Written By Sivamoorthy Kishokumar on Wednesday, June 11, 2014 | 9:06 PM

கால்பந்து மூலமாக தான் பிரேசில் என்ற நாடு இருப்பது அனைவருக்கும் தெரியவந்தது என்று கால்பந்து ஜாம்பவான் பீலே கூறியுள்ளார்.

நாளை உலகமே எதிர்பார்க்கும் உலகக்கிண்ண கால்பந்து போட்டிகள் தொடங்கவுள்ளன.

இந்நிலையில் இறுதிப்போட்டியில் மோதும் அணிகள் பற்றி தான் ரசிகர்களிடையே ஒரே பேச்சாக இருக்கும்.

இது பற்றி பீலே கூறுகையில், 1950ல் நடந்த உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் உருகுவேயிடம் பிரேசில் தோற்றதற்கு இந்த ஆண்டு இறுதிப்போட்டியில் அந்த அணியை பிரேசில் பழி தீர்க்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.

அந்த காரணத்தால் நான் பிரேசிலும், உருகுவேவும் தான் இறுதிப்போட்டியில் மோத வேண்டும் என்று நினைப்பேன்.

மேலும் பிரேசில் என்ற நாடு குறித்து பலருக்கும் தெரியாது. பிரேசில் என்ற ஒரு நாடு உள்ளது என உலக மக்களுக்கு தெரியவந்ததே கால்பந்தாட்டங்களால் தான்.

எனவே பிரேசிலின் பெருமைக்கு கால்பந்து தான் முக்கிய காரணம் என்று கூறியுள்ளார்.

ஷாருக்கானின் ஆதரவுக்கு நன்றி, காம்பீர் நெகிழ்ச்சி

Written By Sivamoorthy Kishokumar on Friday, May 30, 2014 | 1:38 AM

கொல்கத்தாவில் நேற்று நடந்த ஐ.பி.எல் குவாலிபையர் சுற்றில் முன்னாள் சாம்பியனான கொல்கத்தா அணி பலமான பஞ்சாப் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. வெற்றி பெற்ற பின்னர் பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் கவுதம் காம்பீர் கூறுகையில் “இந்த வெற்றி மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இதற்கு முழு காரணமும் எங்கள் அணியின் உரிமையாளர் ஷாருக்கான் தான். அவர் தான் எங்களுக்கு போதிய ஆதரவும் ஊக்கமும் தந்து எங்களை வழி நடத்தினார். இத்தொடரின் தொடக்கத்தில் நான் ஒழுங்காக விளையாடாமல் பல முறை ஆட்டமிழந்த போது ஷாருக்கான் என்னை மிகவும் உற்சாகப்படுத்தினார். அவருக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார். நாளை பஞ்சாப்பிற்கும் சென்னைக்கும் நடக்கும் போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியில் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது.

வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை இராணுவம் மீறுகின்றது: சிவஞானம் சிறிதரன்

வடக்கு, கிழக்கு பகுதிகளில் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை இராணுவம் மீறி வருவதாகவும், அதனால் தமிழ் மக்கள் முழுமையாக நிம்மதியை இழந்துள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.


வடக்கு கிழக்கில் இராணுவத்தினரின் அத்துமீறல்கள் அதிகரித்துள்ளதைக் கண்டித்து இன்று வியாழக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


சிவஞானம் சிறிதரனின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட்டதாகவும் வடக்கு கிழக்கில் ஒரு சுமுகநிலை நிலவுவதாகவும் கடந்த 5 ஆண்டுகளாக இலங்கை அரசாங்கம் சொல்லி வருகின்றது. ஆனால், அதற்கு மாறான நிகழ்வுகளே தமிழர் வாழுகின்ற பிரதேசங்களில் அரங்கேற்றப்படுகின்றது. இன்று வடக்கு கிழக்கில் மிகமோசமான அளவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவருகின்றது.


வடக்கு கிழக்கில் இடம்பெற்ற தேர்தல்களின் மூலம் தமிழர்கள், அரசாங்கத்திற்கு மிகத்தெளிவாக ஒரு செய்தியினைச் சொல்லி இருக்கின்றார்கள். அதாவது, தமிழர்கள் தமது அபிலாசைகளை முழுமையாக தமிழ்த் தேசியத்துக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்ததன் மூலம் தமது அடிமனதிலுள்ள தேவைப்பாட்டை அடித்துரைத்திருக்கிறார்கள். ஆனால் இந்த மக்களின் ஜனநாயக தீர்ப்பினை ஏற்றுக்கொள்ளாத அரசாங்கம் போர்க் காலத்தில் இருந்தது போலவே ஒரு இராணுவ ஆட்சியையே வடக்கு கிழக்கில் நடைமுறைப்படுத்தி வருகின்றது.


கடந்த வடமாகாண சபை தேர்தலில் தமிழ் மக்கள் தமது உச்சகட்ட ஜனநாயக தீர்ப்பை எழுதிய பின்பும் அரசாங்கம் தனது தான்தோன்றித்தனமான செயல்களிலேயே ஈடுபட்டுவருகின்றது. வடமாகாண சபையின் நிர்வாகங்களில் இராணுவம் தலையிட்டுவருகின்றது. இதன் காரணமாக தமிழர்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மதிப்பற்றவர்களாக அவமதிக்கப்படுகின்றார்கள்.


அண்மைக்காலமாக இராணுவத்தால் செய்யப்பட்டுவரும் சுற்றிவளைப்புகள், கைதுகள் என்பவற்றுக்கு மாகாணசபை உறுப்பினர்களும் உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. வட மாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளையின் கிளிநொச்சி திருநகரில் அமைந்துள்ள வீடு இராணுவத்தால் நேற்று புதன்கிழமை (28) அதிகாலை முதல் முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. வடமாகாண சபை உறுப்பினர் எனத்தெரிந்தும் அவரின் அடிப்படை உரிமைகள் இராணுவத்தால் மீறப்பட்டிருகின்றது. இதுபோல அமைச்சர் ஜங்கரநேசனுக்கும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது.


மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கே இந்தநிலை என்றால் சாதாரண தமிழ் குடிமக்களுக்கு என்ன இங்கு நேர்கின்றது என்பதை சர்வதேசம் மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டிய தேவையான சூழல் தமிழர் வாழும் பகுதிகளில் தற்போது நிலவுகின்றது.


முழுமையான ஜனநாயக மறுப்புச் சூழலுக்குள் இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு கிழக்கை இராணுவம் உட்படுத்தி வருகின்றது. இது கண்டனத்திற்குரியது. தமிழர்கள் தற்போது முழுமையாக தமது நிம்மதியை இழந்திருக்கின்றார்கள். அவர்களின் அடிப்படை சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது. எப்போதும் வீடுகள் சுற்றிவளைக்கப்படலாம் எவரும் எப்போதும் கைது செய்யப்படலாம் என்ற நிலையில் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றார்கள்.


வடக்கு கிழக்கு முழுமையான இராணுவ மயமாக்கலுக்குள் சென்றுகொண்டிருப்பதை சர்வதேச சமுகம் கவனத்தில் எடுத்து இலங்கையின் வடக்கு கிழக்கில் தமிழர்கள் உரிமைகளுடன் கூடிய அமைதியான சுதந்திரமான வாழ்வு வாழ வழி அமைக்கவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இனபிரச்சினைத் தீர்வுக்கு எமக்கு எவரும் உத்தரவிட முடியாது, அரசாங்கம்

இனப்பிரச்சினைக்கான தீர்வு, 13ஆவது திருத்தச் சட்டம் அமுல்படுத்தல் போன்ற சகல விடயங்களும் சகல கட்சிகளையும் உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழு மூலமே தீர்மானிக்கப்படும் என ஜனாதிபதி அவர்கள் தெளிவாக இந்தியப் பிரதமரிடம் எடுத்துரைத்துள்ளார்.


அத்துடன் எவரது அழுத்தங்களுக்கும், ஆலோசனைகளுக்கும் இதனை செய்துவிட முடியாது. எவரும் எமக்கு உத்தரவிட முடியாது என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். இந்தியா எமக்கு கூறுவதற்கு செவிமடுக்க முடியும். ஆனால் அவர்கள் கூறுவது போல எம்மால் செய்ய முடியாது.


இரு நாடுகளிலும் பலம் வாய்ந்த அரசுகள் உள்ளன. சர்வதேசத்துக்கு முன்னால் சார்க் வலய நாடுகள் ஒரே எண்ணத்திலான நிலைப்பாட்டை காண்பிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இந்தியப் பிரதமர் உள்ளார் என்றும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட சஜின் வாஸ் குணவர்த்தன தெரிவித்தார்.


13வது திருத்தச்சட்டம் என்பது எம்மீது பலாத்காரமாக திணிக்கப்பட்டதொன்று என்பதை அனைவரும் அறிவார்கள். இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக ஜே.ஆர்.ஜயவர்த்தனவால் இது கொண்டுவரப்பட்டது. இதனை நாம் தொடர்ந்தும் கடைப்பிடித்து வருகிறோம்.


ஒரு கட்டத்தில் நாம் வட மாகாண சபையை உருவாக்க மாட்டோம் என்ற பிரசாரத்தை கொண்டு சென்றார்கள். இன்று வடமாகாண சபையும் உருவாக்கப்பட்டுள்ளது. இப்போது 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்கிறார்கள். முதலில் முழுமையாக என்றால் என்ன? 13வது திருத்தச் சட்டத்தில் எதனை நடை முறைப்படுத்துவது எதனை நீக்குவது என்பது தொடர்பான முடிவை பாராளுமன்றமே எடுக்கும். அதற்காகவே அனைத்துக் கட்சிகளும் உள்ளடக்கியதாக பாராளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.


பாராளுமன்றத்துக்கு வெளியே எங்கெங்காவது சென்று கூறித்திரிவதை விடுத்து எதிர்க்கட்சிகள் பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்குள் வர வேண்டும். அதற்காக ஒதுக்கப்பட்ட ஆசனங்கள் இன்னமும் காலியாகவே காத்திருக்கின்றன என்றும் அமைச்சர் நிமல் தெரிவித்தார்.


இவர்களுடன் அமைச்சர் டலஸ் அழகப்பெரும, சஜின்வாஸ் குணவர்த்தன ஆகியோரும் கலந்துகொண்டனர்.

சுங்க திணைக்களத்தில் உள்ள யானைத் தந்தங்களை அபகரிக்க மகிந்த திட்டம்

யானைகளின் தந்தங்களில் உருவாகும் முத்துக்களை பெற்றுக் கொள்வதற்காக, சுங்க திணைக்களத்தில் வைக்கப்பட்டுள்ள யானைத் தந்தங்களை அபகரிப்பதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதியின் குடும்பத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். ஆங்கில ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.


பல்வேறு காலக்கட்டங்களில் கடத்தப்பட்ட நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட யானைத் தந்தங்கள் சுங்க திணைக்களத்தில் களஞ்சிய அறையில் வைக்கப்பட்டுள்ளது. பல மில்லியன் பெறுமதியான யானைத் தந்தங்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் யானை முத்து இருப்பதாக கருதப்படுகிறது. இந்த நிலையில் அவற்றை அபகரிக்கும் திட்டத்தை ஜனாதிபதி மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆயுத போர் முடிந்தும் ஆக்கிரமிப்பு போர் இன்னும் முடியவில்லை, ஐங்கரநேசன்

விடுதலைப்புலிகளைத் தோற்கடித்த இலங்கை அரசாங்கம் இப்போது மீளவும் புலிகள் உயிர் பெறுவதாகச் சர்வதேசத்துக்குக் காட்ட முயற்சிக்கின்றது. இதற்காகத் தன்வசம் உள்ள சில சருகு புலிகளை புலிகளாக நடமாடவிட்டு, அவர்களுடன் தொடர்பு கொண்டார்கள் என்ற பெயரில் பலரைக் கைதுசெய்யும் நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது என்று வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குற்றம் சாட்டியுள்ளார்.


நேற்று கிளிநொச்சி மாவட்டச் செயலகத்துக்கு முன்னால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்த நில அபகரிப்புக்கு எதிரான கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

போர் முடிந்து ஐந்து வருடங்கள் கடந்துவிட்டன என்பது உண்மைதான். ஆனால், ஆயுத ரீதியாக இலங்கை அரசாங்கம் தமிழ் மக்கள் மீது தொடுத்த போர் முடிவுக்கு வந்துள்ளதே தவிர, தமிழ் மக்கள் மீதான ஆக்கிரமிப்புப் போர் இன்னமும் நின்றபாடில்லை.

போர்க்காலத்தைவிட வேகமாகத் தமிழ் மக்களின் நிலங்கள் அரசால் ஆக்கிரமிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. எமது மக்களைப் பலவந்தமாக அவர்களின் சொந்த நிலங்களில் இருந்து விரட்டியடித்துவிட்டு அந்த இடங்களில் படையினர் முகாங்களை அமைத்து வருகின்றனர்.

இராணுவத்தை வெளியேற்றிவிட்டுத் தங்கள் சொந்த இடங்களிலேயே தங்களை மீள்குடியேற்ற வேண்டும் என்று எமது மக்கள் ஜனநாயக ரீதியாகப் போராடி வருகிறார்கள். இருப்பினும் படையினரின் பிரசன்னம் தொடர்ச்சியாகத் தேவை என்று உலக நாடுகளுக்குக் காட்டி, நிரந்தரமாகவே எமது பகுதிகளில் இராணுவத்தை நிலைநிறுத்துவதற்காக அரசாங்கம் புலிகள் மீளிணைகிறார்கள் என்று புனைய ஆரம்பித்துள்ளது.

இதனை மேலும் சோடிப்பதற்காகப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தார்கள் என்று சொல்லிப் பலரைக் கைது செய்தும் வருகிறது. ஜனநாயக ரீதியாகப் போராட முற்படுபவர்களுக்கும் புலிச்சாயம் பூசி பொய்வழக்குப் போட்டுக் கைது செய்கிறது.

எது எவ்வாறாயினும் இராணுவம் எமது மக்களுக்குச் சொந்தமான நிலங்களில் இருந்து வெளியேறியே ஆகவேண்டும். அரசாங்கத்தின் முடிக்குரிய காணிகளாக இருந்தாலும்கூட, அங்கு படையினர் நிலைகொள்வது பொதுமக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துமாக இருந்தால் அங்கிருந்தும் அவர்கள் வெளியேறுவதுதான் நீதியானது என்று எமது முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

எனவே அரசு மேற்கொள்ளும் திட்டமிட்ட நில அபகரிப்பை எப்பாடுபட்டாயினும் தடுத்தாக வேண்டும். இல்லாவிடில், தமிழ் மக்கள் தமது தாயகத்திலேயே சிறுபான்மையினராகி ஒட்டுமொத்த இலங்கைத் தீவும் சிங்கள பௌத்த பெருந்தேசிய இனத்துக்கு என்றாகிவிடும்.

இவ்வாறான இராணுவத்தின் திட்டமிட்ட நில அபகரிப்புக்கு எதிராக எமது போராட்டத்தை மேலும் விரைவும் விரிவும்படுத்த வேண்டும். இதற்குக் கட்சி வேறுபாடு இல்லாமல் நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை விவகாரங்களை கையாள விசேட பிரதிநிதி, மோடி நடவடிக்கை

இலங்கை விவகாரங்களை கையாள்வதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விசேட பிரதிநிதி ஒருவரை நியமிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய மத்திய அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இலங்கையில் தமிழர்களின் பிரச்சினை நீண்டகாலமாக நிலவி வருகிறது. இந்த பிரச்சினையில் இந்தியா முக்கிய பங்கினை வகிக்கிறது.


இந்த நிலையில் அதனை தீர்த்து வைக்க வேண்டிய பொறுப்பு தம்மிடம் உள்ளது என்பதை நரேந்திர மோடி உணர்ந்துக் கொண்டுள்ளார். அதனை தாம் நேரடியாக கையாளும் வகையில், விசேட பிரதிநிதி ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.


முன்னதாக இந்திராகாந்தி இந்தியாவின் பிரதமராக இருந்த போது, இலங்கை விவகாரங்களை கையாள்வதற்காக பார்த்தசாரதியை விசேட பிரதிநிதியாக நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பை தமிழ் நாட்டுக்கு அழைக்கவுள்ளார் ஜெ?

தம்மை சந்திப்பதற்காக தமிழகத்தின் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம், தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்தின் ஊடகம் ஒன்று இதனை இன்று தெரிவித்தது. ஈழத் தமிழரின் பிரச்சினை தீர்வுக்கு இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழக முதல்வருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தது.


இந்த கடிதம் தமிழக முதல்வருக்கு கிடைக்கப் பெற்ற நிலையில், அதற்கு சாதகமான பதில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதன்படி ஜெயலலிதா ஜெயராம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளை விரைவில் தமது அலுவலகத்துக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று முதலமைச்சர் அலுவலகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மஹாவம்சத்தில் மன்னராக மகிந்த, தளபதியாக கோத்தபாய

சிங்கள வரலாற்றை கூறும் மஹாவம்சம் நூலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இலங்கையின் மன்னராகவும், கோத்தபாய ராஜபக்ஷ தளபதியாகவும் வர்ணிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தொடர்பான அத்தியாயங்கள் தற்போது எழுதப்பட்டு வருவதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.


இறுதி யுத்தத்தின் போது பொது மக்களின் ஒருவரேனும் உயிரிழக்காமல் போரை வெற்றி கொண்ட மன்னராக மகிந்த ராஜபக்ஷ சித்தரிக்கப்பட்டுள்ளார். இதேவேளை இந்த யுத்தத்துடன் தொடர்புடைய சரத் பொன்சேகா, லக்ஸ்மன் ஹுலுகல்ல போன்ற அரசாங்கத்துக்கு எதிரானவர்கள் பெயர்கள் எவையும் அதில் உள்ளடக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.


மேலும் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் யாரும் இராணுவத்திடம் சரணடையவில்லை என்றும் அனைவரையும் இராணுவமே போராடி கைது செய்ததாகவும் எழுதப்படுகிறது.

முஸ்லிகளின் ஹிஜாப் உடைக்கு சிங்கள பாடசாலை தடை

கொழும்பு மாவட்டத்தில் உள்ள முக்கிய பாடசாலைகளில் ஒன்றான ராஜகிரிய ஜனாதிபதி மகளிர் வித்தியாலயத்திற்குள் முஸ்லிம் தாய்மார் பாரம்பரிய ஹிஜாப் உடையணிந்து பிரவேசிப்பதை தடைசெய்வதற்கு பாடசாலையின் அதிபர் தீர்மானித்துள்ளார்.

இந்தத் தடையை எதிர்த்து குறித்த முஸ்லிம் தாய் உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை வழக்குத் தாக்கல் செய்துள்ளார். இந்தப் பாடசாலையில் ஏழாம் தரத்தில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவி பாரம்பரிய பஞ்சாபி உடை அணிந்துவருவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்துவருகின்றது.
இந்த சூழ்நிலையிலேயே முஸ்லிம் தாய் ஒருவரும் பாடசாலைக்குள் ஹிஜாப் உடை அணிந்து வருவதற்கு அதிபர் தடை விதித்துள்ளார்.

சிங்கள மொழிமூல பாடசாலையான கொழும்பு ராஜகிரிய ஜனாதிபதி மகளிர் வித்தியாலத்தில் நடைபெற்ற பெற்றோர்கள் கூட்டமொன்றில் கலந்துகொள்வதற்காக சென்றபோது, ஹிஜாப் உடை அணிந்திருந்த காரணத்தினால் தன்னை பாடசாலைக்குள் நுழைய அனுமதிக்கவில்லை என்று மனுதாரர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான தடையை பிறப்பிப்பதற்கு பாடசாலை அதிபருக்கு அதிகாரம் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தத் தடைக்கான காரணத்தை தெரியப்படுத்த குறித்த பாடசாலை அதிபர் தவறியுள்ளதாகத் தெரிவித்த மனுதாரர் சார்பான வழக்கறிஞர் எம்.எம். சுஹயிர், கொழும்பு மாவட்டத்தில் எந்தவொரு சிங்கள மொழிமூல பாடசாலையிலும் இவ்வாறான தடை இல்லை என்றும் கூறியுள்ளார்.

இந்த மனுவை எதிர்வரும் 19 ம் திகதி விசாரணைக்கு அழைப்பதற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அன்றைய தினம் இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விளக்கமளிக்குமாறு பாடசாலை அதிபர் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.இதனிடையே, இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான பாடசாலை நிர்வாகத்தின் கருத்துக்கள் உடனடியாக கிடைக்கப்பெறவில்லை.

எனினும், பஞ்சாபி உடை தடைசெய்யப்பட்டமைக்கு எதிரான வழக்கின்போது, மாணவர்களிடையே இனவாதத்தை தூண்டும் நோக்கில் அந்த மனு முன்னெடுக்கப்படுவதாக பாடசாலை அபிவிருத்தி குழுவினைச் சேர்ந்த சித்ரானந்த கமகே குற்றம் சாட்டினார். இஸ்லாமிய இனவாத குழுக்கள் இதன் பின்னணியில் இருப்பதாகவும் அவர் சாடினார்.

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. WeCreatorsNet - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger