Home » » ஆயுத போர் முடிந்தும் ஆக்கிரமிப்பு போர் இன்னும் முடியவில்லை, ஐங்கரநேசன்

ஆயுத போர் முடிந்தும் ஆக்கிரமிப்பு போர் இன்னும் முடியவில்லை, ஐங்கரநேசன்

Written By Sivamoorthy Kishokumar on Friday, May 30, 2014 | 12:56 AM

விடுதலைப்புலிகளைத் தோற்கடித்த இலங்கை அரசாங்கம் இப்போது மீளவும் புலிகள் உயிர் பெறுவதாகச் சர்வதேசத்துக்குக் காட்ட முயற்சிக்கின்றது. இதற்காகத் தன்வசம் உள்ள சில சருகு புலிகளை புலிகளாக நடமாடவிட்டு, அவர்களுடன் தொடர்பு கொண்டார்கள் என்ற பெயரில் பலரைக் கைதுசெய்யும் நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது என்று வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குற்றம் சாட்டியுள்ளார்.


நேற்று கிளிநொச்சி மாவட்டச் செயலகத்துக்கு முன்னால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்த நில அபகரிப்புக்கு எதிரான கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

போர் முடிந்து ஐந்து வருடங்கள் கடந்துவிட்டன என்பது உண்மைதான். ஆனால், ஆயுத ரீதியாக இலங்கை அரசாங்கம் தமிழ் மக்கள் மீது தொடுத்த போர் முடிவுக்கு வந்துள்ளதே தவிர, தமிழ் மக்கள் மீதான ஆக்கிரமிப்புப் போர் இன்னமும் நின்றபாடில்லை.

போர்க்காலத்தைவிட வேகமாகத் தமிழ் மக்களின் நிலங்கள் அரசால் ஆக்கிரமிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. எமது மக்களைப் பலவந்தமாக அவர்களின் சொந்த நிலங்களில் இருந்து விரட்டியடித்துவிட்டு அந்த இடங்களில் படையினர் முகாங்களை அமைத்து வருகின்றனர்.

இராணுவத்தை வெளியேற்றிவிட்டுத் தங்கள் சொந்த இடங்களிலேயே தங்களை மீள்குடியேற்ற வேண்டும் என்று எமது மக்கள் ஜனநாயக ரீதியாகப் போராடி வருகிறார்கள். இருப்பினும் படையினரின் பிரசன்னம் தொடர்ச்சியாகத் தேவை என்று உலக நாடுகளுக்குக் காட்டி, நிரந்தரமாகவே எமது பகுதிகளில் இராணுவத்தை நிலைநிறுத்துவதற்காக அரசாங்கம் புலிகள் மீளிணைகிறார்கள் என்று புனைய ஆரம்பித்துள்ளது.

இதனை மேலும் சோடிப்பதற்காகப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தார்கள் என்று சொல்லிப் பலரைக் கைது செய்தும் வருகிறது. ஜனநாயக ரீதியாகப் போராட முற்படுபவர்களுக்கும் புலிச்சாயம் பூசி பொய்வழக்குப் போட்டுக் கைது செய்கிறது.

எது எவ்வாறாயினும் இராணுவம் எமது மக்களுக்குச் சொந்தமான நிலங்களில் இருந்து வெளியேறியே ஆகவேண்டும். அரசாங்கத்தின் முடிக்குரிய காணிகளாக இருந்தாலும்கூட, அங்கு படையினர் நிலைகொள்வது பொதுமக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துமாக இருந்தால் அங்கிருந்தும் அவர்கள் வெளியேறுவதுதான் நீதியானது என்று எமது முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

எனவே அரசு மேற்கொள்ளும் திட்டமிட்ட நில அபகரிப்பை எப்பாடுபட்டாயினும் தடுத்தாக வேண்டும். இல்லாவிடில், தமிழ் மக்கள் தமது தாயகத்திலேயே சிறுபான்மையினராகி ஒட்டுமொத்த இலங்கைத் தீவும் சிங்கள பௌத்த பெருந்தேசிய இனத்துக்கு என்றாகிவிடும்.

இவ்வாறான இராணுவத்தின் திட்டமிட்ட நில அபகரிப்புக்கு எதிராக எமது போராட்டத்தை மேலும் விரைவும் விரிவும்படுத்த வேண்டும். இதற்குக் கட்சி வேறுபாடு இல்லாமல் நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. WeCreatorsNet - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger